உடுமலை : உடுமலை நகராட்சி பகுதிகளில் மூன்று நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில் 70 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உடுமலை நகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இத்திட்டம் உள்ளது.உடுமலை நகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இக்குடிநீர் திட்டம் முறையாக பராமரிக்கப்படாததால், அடிக்கடி குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென மூன்று நாட்களாக உடுமலை நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.உள்ளூர் குடிநீர் ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், நகராட்சி நிர்வாகமும் முறையாக எந்த ஏற்பாடுகளும், முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென குடிநீர் வினியோகத்தை நிறுத்தியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குடிநீர் வராததால் விலைக்கு வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.நகராட்சி அலுவலகத்தில் இது குறித்து விசாரித்தாலும், எதற்காக குடிநீர் நிறுத்தப்பட்டது, எத்தனை நாட்களில் குடிநீர் வினியோகம் துவங்கும் என்பது குறித்து முறையாக பதில் அளிக்காமல் நகராட்சி அதிகாரிகள் மெத்தனபோக்கை கடைபிடித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.நகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் வினியோகம் மேற்கொள்ளவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் குடிநீரை சேமித்து பயன்படுத்தும் வகையில், முன்னதாகவே அறிவிப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Download As PDFPrint this post
0 comments: (+add yours?)
Post a Comment