திருப்பூர் மாவட்டம் உதயமாகி ஓராண்டு நிறைவு

ரூ.1.50 கோடி மதிப்பிலான நவீன எரிவாயு மயானம் 21ம் தேதி திறப்பு

சுற்றுப்புற சூழல் மாசுபடாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எரிவாயு மயானத்தில், இறுதி சடங்கு செய்யும் வகையில், பிரார்த்தனை மண்டபம், எரியூட்டு மையம், மொட்டையடித்து சடங்கு செய்வதற்கு தனி மண்டபம் உட்பட அனைத்து வசதிகளுடன் , அழகாக வடிமைக்கப்பட்டுள்ளது. மரம் மற்றும் தேங்காய் சிரட்டை மூலம், “பயோ காஸ்’ உற்பத்தி செய்து, உயர் வெப்பத்தில் சடலம் எரிக்கப்படுகிறது. வெளியேறும் புகையால் சுற்றுப்புறம் பாதிக்காமல் இருக்க, இயந்திரம் மற்றும் தண்ணீர் தொட்டிகள் வழியாக வாயு சுத்திகரிக்கப்பட்டு, 100 அடி உயரமுள்ள புகை போக்கி வழியாக வெண் புகை வெளியேற்றப்படுகிறது. இதன் திறப்பு விழா வரும் 21ம் தேதி நடக்கிறது.
திறப்பு விழாவிற்கு மக்கள் பேரவையின் தலைவர், தொழிலதிபர் கெங்குசாமி தலைமை வகிக்கிறார். நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் கலெக்டர் சமயமூர்த்தி, எஸ்.எஸ்.ஏ., ஆலோசகர் விஜயகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மக்கள் பேரவை நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:
நவீன எரிவாயு மயானத்திற்கு இந்திய மருத்துவ சங்கம், ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம் சார்பில் ஒன்பது லட்சம் செலவில் அமரர் ஊர்தியும் வழங்கப்படுகிறது. எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் ஏழு லட்சம் ரூபாய் செலவில், தனியாக ஒரு மண்டபம், தளம் அமைக்கப் பட்டுள்ளது. தினமும் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பதிவு செய்யப்படும். காலை 9.00 மணி முதல் 6.00 மணி வரை சடலம் எரியூட்டப்படும். பதிவு அடிப்படையில் சடலம் எரியூட்டப் படுகிறது.
ஒரு சடலம் எரிவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். தினமும் எட்டு சடலம் வரை எரிக்கலாம். பதிவு செய்தால், நவீன எரிவாயு மயானத்திலிருந்து வாகனம் மூலம் சடலம் எடுத்து வரப்படும். போக்குவரத்து மற்றும் எரியூட்டும் செலவாக ஒரு சடலத்திற்கு, 20 கி.மீ., வரை 1200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20 கி.மீ., க்கு மேல் இருந்தால், கி.மீ.,க்கு, 10 ரூபாய் வசூலிக்கப்படும். சடலம் எரியூட்டப்பட்டு, அஸ்தி எடுத்து வழங்கப்படும். குறைந்த செலவில், சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படாது. மேலும், மற்றொரு எரியூட்டும் அமைப்பு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் நிதி உதவி அளிக்க முன்வரவேண்டும்’ என்றனர்.
துணை தலைவர் முத்துகுமாரசாமி, நவீன எரிவாயு மயான அறக்கட்டளை தலைவர் டாக்டர் சிவசண்முகம், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாலசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
0 comments: (+add yours?)
Post a Comment