உடுமலை: இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும், உடுமலையை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டம் அமைக்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளை உள்ளடக்கி பொள்ளாச்சி கல்வி மாவட்டம் செயல்பட்டு வந்தது. இந்த கல்வி மாவட்டத்தில் உடுமலை பகுதியிலேயே பெரும்பாலான தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அதிகளவில் செயல்பட்டு வந்தன.
உடுமலையில் ஐந்து உயர்நிலை பள்ளிகள், நான்கு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, ஏழு அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. மெட்ரிக் பள்ளிகளில் இரண்டு உயர்நிலை ;ஏழு மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. மடத்துக்குளத்தில், மூன்று உயர்நிலைப்பள்ளி, இரண்டு மேல்நிலைப்பள்ளி, ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியும்; குடிமங்கலத்தில், இரண்டு உயர்நிலை, மூன்று மேல்நிலை, மூன்று மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன. பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டம் செயல்பட்டு வந்ததால், நிர்வாக பணிகளில் எவ்வித சிரமமும் இல்லாமல் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு உடுமலை தாலுகா சேர்க்கப்பட்டது. புதிய மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டு, கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டார். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலிருந்த உடுமலை பள்ளிகள் பிரிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு வருவாய் மாவட்டத்தில், இரண்டு கல்வி மாவட்ட அலுவலகங்கள் செயல்படுவது வழக்கம். ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை ஒரே கல்வி மாவட்ட அலுவலகம் மட்டும் இயங்கி வருகிறது. பள்ளிக்கல்விதுறை வரையறைகளின் படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகளை உள்ளடக்கி கல்விமாவட்டம் அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி மாவட்டம் தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு அமைக்க கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு உடுமலை பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உடுமலையிலிருந்து 40 கி.மீ., தூரமுள்ள தாராபுரத்திற்கு சென்று வந்தால் ஒரு நாள் பள்ளி பணிகள் பாதிக்கப்படும். தேவனூர்புதூர், கரட்டுமடம் போன்ற பகுதியிலிருந்து 60 கி.மீ., செல்ல வேண்டும். இதனால், ஆசிரியர்கள், கல்வி பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி கல்விப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே,அதிகளவு கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய உடுமலை பகுதியை கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு, மற்ற துறைகளுக்கான அலுவலகம் அமைக்கப்பட்ட நிலையில், கல்வித்துறையில் மட்டும் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அலுவலக பணி மற்றும் ஆசிரியர்கள் கூட்டம் உட்பட அனைத்து பணிகளுக்கும் உடுமலையிலிருந்து ஆசிரியர்கள் திருப்பூருக்கு சென்று வருகின்றனர். மாணவர்களும் தேர்வு எழுத, விண்ணப்பங்கள் பெற திருப்பூருக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே உடுமலையை தலைமையிடாக கொண்டு கல்வி மாவட்டம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காரத்தொழுவில், பள்ளி கட்டடத்திறப்பு விழாவில், பங்கேற்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடுமலை கல்வி மாவட்டமாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவுகிறது.

0 comments: (+add yours?)
Post a Comment