உடுமலை:பெதப்பம்பட்டி நால்ரோட்டில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால், நெரிசல் அதிகரித்து மாணவர்கள் தொடர் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி-தாராபுரம் மற்றும் உடுமலை-செஞ்சேரிமலை ரோடு பெதப்பம்பட்டி நால்ரோட்டில் சந்திக்கிறது. பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டிக்கு இயக்கப்படும் பஸ்கள் நால்ரோட்டில் திரும்பி செல்கின்றன.அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ள இப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்சுக்காக பெதப்பம்பட்டி நால்ரோட்டில் நிற்கின்றனர்.இந்நிலையில், இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சொந்தமான பகுதிகளில் கடந்த சில மாதங்களில் ஆக்கிரமிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. உடுமலை மற்றும் பொள்ளாச்சி பஸ்கள் நிற்கும் இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளால் பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தப்படும் அவல நிலை உள்ளது.
கடந்தாண்டு பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் ரோடு விரிவாக்க பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.அப்போது போக்குவரத்து நெரிசலை குறைக்க இரண்டு பஸ் ஸ்டாப் நிழற்குடைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட பகுதியை தற்போது சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பஸ்கள் திரும்புவதற்கு போதிய இடம் இல்லாமல் நெரிசல் ஏற்படுகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நிற்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்கப்பட்ட பகுதி ஒராண்டுக்குள் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு, பஸ் மற்றும் பொதுமக்கள் நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டில் பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தப்படுவதால் பிற வாகனங்கள் விலகி செல்ல முடிவதில்லை.
இதனால், நெரிசல் ஏற்படும் போது நால்ரோட்டை கடக்கும் மாணவர்கள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் நால்ரோடு பகுதி முழுவதும் நெரிசலால் பாதிக்கப்படும் நிலையிலும் குடிமங்கலம் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொள்வதில்லை.உடுமலை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பொள்ளாச்சி ரோட்டிற்கு திரும்ப இடையூறாக புளியமரம் இருந்தது. இந்த மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் வருவாய்துறை அதிகாரிகளுக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆதிக்கத்தில் சிக்கியிருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து உடனடியாக எடுக்காவிட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்த பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
Download As PDFPrint this post
0 comments: (+add yours?)
Post a Comment