make gif

உடுமலையில் பருத்தி அறுவடை துவக்கம்: விலை குறைவால் விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை : தொடர்மழையால் பருத்தி சாகுபடியில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தையில் பல்வேறு காரணங்களை கூறி செயற்கையாக கொள்முதல் விலை குறைக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில்,கோவை, தேனி, ராஜபாளையம், சேலம், கொங்கணாபுரம், நாமக்கல் பகுதியில் பருத்தி அதிகளவு பயிரிடப்படுகிறது. கடந்த சீசனில் பயிரிடப்பட்ட பருத்தி சாகுபடி தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை பகுதியில் பி.ஏ.பி., பாசனத்திற்கு பரவலாக பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. மிக நீண்ட இழை பருத்தி ரகங்கள் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ளன. தொடர்மழையால் செடிகளில் நோய்த்தாக்குதல் மற்றும் காய் சப்பை உதிர்வது ஆகிய காரணங்களால் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.
அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், பருத்தி சந்தையில் அனைத்து ரக பருத்தியின் விலையும் சற்று குறைந்துள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, மிக நீண்ட இழை பருத்தி ரகம் கிலோ 42 ரூபாயிலிருந்து 45 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சீசனில் இந்த ரக பருத்தி கிலோ 48 ரூபாய் முதல் 52 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. பருவநிலை ஒத்து போனதால் கடந்த சீசனில் ஏக்கருக்கு 12 முதல் 15 குவிண்டால் வரை விளைச்சல் இருந்தது.
தற்போது ஏக்கருக்கு 10 குவிண்டால் கூட விளைச்சல் கிடைக்காத நிலை உள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதலால் சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுவடை பணிகள் துவங்கியுள்ள போதிலும் கிராமங்களில் பருத்தி கொள்முதல் துவங்கவில்லை. செடிகளில் காய்கள் வெடித்துள்ள போதிலும் தற்போது நிலவும் பனிப்பொழிவு மற்றும் லேசான மழை காரணமாக பருத்தியில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால், பருத்தியின் தரம் பாதிக்கப்பட்டு விலை மேலும் குறையும். இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும் அறுவடையில் மட்டுமே தரமான பருத்தி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு, இந்த சீசனில் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் பல்வேறு சோதனைகளில் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில், பருத்தி நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை அடிப்படையாக கொண்டு செயற்கையாக கொள்முதல் விலையை குறைக்கும் பணியில் இடைதரகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பருத்தி மத்திய அரசின் பருத்தி கழகத்தின் மூலம் விவசாயிகளிடையே நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket