உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. விடுமுறை நாட்களில் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அணை மற்றும் வனப்பகுதியில் பலர் மது அருந்துவது உட்பட அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், பக்தர்கள் வேதனையடைகின்றனர். இந்நிலையில், திருமூர்த்தி அணைப்பகுதியில் தற்கொலை சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. உடுமலை போலீஸ் உட்கோட்டம் தளி போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் திருமூர்த்திமலை பகுதி உள்ளது. குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தளி போலீசார் இப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு வந்தனர்.
அத்துமீறல்களை தடுக்கவும், தற்கொலைகளை தடுக்கவும் திருமூர்த்திமலைப்பகுதியில் போலீஸ் செக்போஸ்ட் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கோவை பள்ளி குழந்தைகள் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், கடத்தல்காரர்கள் திருமூர்த்திமலை பகுதிக்கு வந்து சென்றுள்ளனர். போலீஸ் கண்காணிப்பு எதுவும் இல்லாததால் கடத்தல்காரர்கள் இப்பகுதியில் எளிதாக ஊடுருவுகின்றனர்.இதனால், ஏற்படும் பாதிப்புகள் மற்றும் செக்போஸ்ட் அமைக்க வேண்டியதின் முக்கியத்துவம் குறித்து "தினமலரில்' செய்தி வெளியானது. கடந்த மாதம் செக்போஸ்ட் அமைக்க தளி போலீசாரால் இடம் தேர்வு செய்யப்பட்டது.
மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி உத்தரவு அடிப்படையில் நேற்று முதல் திருமூர்த்தி அணை அருகேயுள்ள விருந்தினர் மளிகை பகுதியில் செக்போஸ்ட் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. செக்போஸ்ட்டில் ஷிப்டுக்கு மூன்று போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். வாகன தணிக்கை, அணைப்பகுதியில் ரோந்து, வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களின் எண்களை பதிவு செய்தல், இருசக்கர வாகனங்களில் மதுபாட்டில்களை எடுத்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உட்பட பணிகளை இங்கு நியமிக்கப்பட்டுள்ள போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட்டிற்கு நிரந்தர கட்டடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டாக கிடப்பில் போடப்பட்டிருந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
