
EARN MONEY WITHOUT INVESTMENT
அமராவதி அணையில் நீர்மட்டம் 4 அடி உயர்வு
AprWednesday,27,
உடுமலை : உடுமலை அருகே தொடர் மழை காரணமாக அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட உட்பட்ட 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இரண்டு மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 90 அடி கொள்ளளவு உடைய அணையில், பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தாண்டு, வடகிழக்கு பருவமழைக்கு பிறகு அணைக்கு போதிய நீர் வரத்து இல்லை. நீர் இருப்பு பல கட்டங்களாக பாசனத்திற்கு திறக்கப்பட்டது. காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பற்ற புதிய ஆயக்கட்டு பகுதிக்கு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் 18 ம் தேதி வரை பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 40 அடிக்கு குறைவாகவும் இருந்த அணையின் நீர்மட்டம் தண்ணீர் திறப்பால் வேகமாக குறைந்தது. நீர் வரத்து ஆறுகளான பாம்பாறு மற்றும் சின்னாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், வறண்டு காணப்பட்டது. இதனால், கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் நீடித்தது. தற்போது சின்னாறு, பாம்பாறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 2நாட்களின் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 28.38 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 404 கன அடியாக இருந்தது. அணையில் நேற்று 11 மி.மீ., மழை பெய்தது.
அமராவதி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிவு:படகு போக்குவரத்து நிறுத்தம்
MarFriday,11,உடுமலை : அமராவதி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து, பாறைகள் தெரிவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்துள்ளதால் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உடுமலை அருகே 90 அடி கொள்ளளவு உடைய அமராவதி அணை கடந்த நவ., மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் நிரம்பியது. இதனையடுத்து, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஜன., 1 ல் தண்ணீர் திறக்கப்பட்டு பிப்., மாத இறுதி வரை தண்ணீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாதது, கொளுத்தும் வெயில் காரணமாக அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்து 10 கன அடி மட்டுமே உள்ளது. இதனால், அணையின் நீர் மட்டம் சரிந்து பல இடங்களில் பாறை தெரிகிறது.நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 38.19 அடியாக இருந்தது. நீர் வரத்து 10 கன அடியாகவும், வெளியேற்றம் 200 கன அடியாகவும் உள்ளது.அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.கோடையை சமாளிக்குமா? அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய மூன்று ஆறுகளின் மூலம் அணைக்கு தண்ணீர் பெறப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வழக்கமாக ஜூன் மாத துவக்கத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். கோடை வெயில் முன்னதாகவே துவங்கி கொளுத்தி வரும் நிலையில், ஜூன் மாதம் வரை அணை வறண்டு விடாமல் இருப்பது கேள்விக்குறியாகியுள்ளது. தற்போதுள்ள 38.19 அடி நீர் மட்டத்தில் நெற்பயிர்களை காப்பற்ற 15 நாட்கள் தண்ணீர் கேட்டு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பாசனத்திற்கு தண்ணீர் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்கப்பட்ட பின் மழை பெய்தால் மட்டுமே அணை வறண்டு விடுவது தவிர்க்கப்படும். மழை கைவிட்டால், அணையை நம்பியுள்ள இரண்டு மாவட்ட குடிநீர் ஆதாரங்கள் வறண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது.

உடுமலையில் கல்வி மாவட்டம் அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்
FebWednesday,2,உடுமலை: "சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், செயல் வழி கற்றல் முறை தொடருமா என்பது குறித்து அரசு தெளிவாக விளக்கமளிக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. உடுமலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், கல்வித்துறை நிர்வாக வசதிக்காக உடுமலை தனி "கல்விமாவட்டமாக' அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பள்ளிகளில், தற்போது நடைமுறையில் முதல்வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை செயல்வழி கற்றல்முறை உள்ளது. பாடத்திட்டத்தில் செயல்வழி கற்றல் முறை குறித்த தெளிவாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் போது, செயல்வழி கற்றல் முறை தொடருமா என்பது குறித்தும், செயல்வழி கற்றல்முறை தொடரும் என்றால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி ? யார் பயிற்சி அளிப்பது என விளக்க வேண்டும். தரமான கல்வி என்பது மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து மாறி இயல்பாக அனைத்து திறனும் வெளிப்படும் வகையில், தேர்வு முறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். இது குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும். ஆசிரியர்களின் அணுகுமுறைகளில், செயல் திறனில் முன்னேற்றம் வளர்க்க திறமையான நிர்வாக அமைப்பை உருவாக்க வழிகாட்டுதல் வேண்டும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாமில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். கிராம கல்வித்திருவிழா நடைபெறும் நாளில், கல்விதீபம் ஏற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், தலைவர் ஸ்ரீரங்கன், ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், மணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Download As PDF

திருமூர்த்தி அணையில் சினிமா "செட்'களை 2 நாட்களில் அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவு

உடுமலை: திருமூர்த்தி அணையில், தண்ணீரை மாசுபடுத்தி வரும் சினிமா "செட்'களை இரண்டு நாட்களுக்குள் அகற்ற திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் படப்பிடிப்பு குழுவினருக்கு இதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. உடுமலை அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணை, பல லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது. கடந்த ஜன., 24 ம் தேதி முதல் திருமூர்த்தி அணை பகுதியில், முதல்வரின் கதை வசனத்தில் உருவாகும் "பொன்னர்-சங்கர்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அணையின் ஒரு கரையில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் பகுதியில் பழமையான கோவில், அரண்மனை, போர் முரசுகள் அமைக்கப்பட்டன. இப்பகுதியில் இயல்பாக சுற்றி வந்து கொண்டிருந்த யானைகளின் வழித்தடத்தை மறித்ததால், அவை வேறு பகுதிக்குள் தஞ்சம் அடைந்தன. மேலும், வனவிலங்குகள் மர்மமான முறையிலும் இறந்து கிடந்தன. இவ்வளவு நடந்தும், அனைத்து அரசு துறை விதிமுறைகளையும் மீறி படப்பிடிப்பு நடந்தும், எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களுக்கு முன் உயர்ந்த நிலையில், படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட "செட்'கள் தண்ணீரில் மூழ்கின. அதிலிருந்து பல்வேறு ரசாயன கழிவுகள் வெளியேறி தண்ணீர் மாசுபட்டது. பாசன ஆதாரமாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகளின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கும் அணை, சினிமா படப்பிடிப்பால் பாதிக்கப்பட்டது பற்றியும், துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், முதல்வரின் கதை-வசனத்திற்காக மவுனம் சாதித்தது குறித்தும், "தினமலரில்' செய்தி வெளியானது. இதையடுத்து, பி.ஏ.பி., திட்ட அதிகாரிகளிடம் படப்பிடிப்பு செட் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதிகாரிகள் அறிக்கையின் படி அணையின் நீர் தேக்க பரப்பில் செட்கள் அமைக்கப்பட்டிருந்ததும், ரசாயன கழிவுகள் தண்ணீர் கலப்பதும் தெரியவந்தது. அறிக்கையின் அடிப்படையில், படப்பிடிப்பிற்கான செட்களை 2 நாட்களில் அகற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அணை பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றிருந்தாலும், நீர் நிலைகள் மாசுபடும் வகையில் "செட்'கள் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை அகற்ற இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கவுரவ விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
JanMonday,31,உடுமலை: கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியை நிரந்தரப்படுத்தக் கோரி, மூன்று ஆண்டுகளாக, கவுரவ விரிவுரையாளர்களை பல கட்டப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடந்த உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பின், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், உடன்பாட்டை அமல்படுத்தாமல், கவுரவ விரிவுரையாளர்கள் 170 பேரை, அரசு பணி நீக்கம் செய்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரம் மூன்று நாட்கள், தமிழகம் முழுவதும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம், உடுமலை எலையமுத்தூர் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநிலத்தலைவர் முத்துசாமி கூறுகையில், ""கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த கட்டமாக, கவுரவ விரிவுரையாளர்களை இணைத்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.
அமராவதி ஆற்றில் மணல் திருட்டு: விவசாயிகள் அதிருப்தி
உடுமலை: அமராவதி ஆற்றில் மணல் திருட்டு அதிகரித்துள்ளதால், விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆற்றின் கரையோரத்தில் பல்வேறு கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.அமராவதி ஆற்றில் தொடர்ந்து நடக்கும் மணல் திருட்டால், ஆற்றின் இயல்பான பாதை மாறுவதுடன், பல ஆயிரம் ஏக்கருக்கான நிலத்தடி நீர் மட்டமும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.தொடர்ந்து, ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் மணல் திருட்டு கடந்த ஒரு மாதம் தடைபட்டிருந்தது. இந்நிலையில், கரூர் போன்ற பகுதிகளிலிருந்து மணல் வரத்து குறைந்ததால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மணல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதையடுத்து அமராவதி ஆற்றில் மீண்டும் மணல் திருட்டு அதிகரித்துள்ளது. ஆற்றில் தண்ணீர் சென்றாலும் நூதன முறைகளை பயன்படுத்தி மணல் திருடப்படுகிறது. அணையிலிருந்து சில கி.மீ., தொலைவில் அமைந்துள்ள கல்லாபுரம் பகுதியில் திருட்டு சமீபகாலமாக அதிகரித்துள்ளது.திருட்டிற்காக பிரத்யேகமாக மிதவைகளை அமைத்துள்ளனர். கரையோரத்தில், மணலை அள்ளி குவித்து வைத்து சிறிய சாக்குபைகளில் அவற்றை கட்டி வைக்கின்றனர். ரோட்டிற்கு கொண்டு வர வழியில்லாததால் மிதவைகளில் மூட்டைகளை போட்டு மறுகரைக்கு எடுத்து வருகின்றனர். பின்னர் சைக்கிள் மற்றும் பைக் ஆகிய வாகனங்களில் மூட்டைகளை எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர்.இவ்வகை திருட்டால் ஆற்றின் கரையோரத்தில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு குளிக்க செல்பவர்களும், இதர தேவைக்காக அப்பகுதிக்கு செல்பவர்களும் தண்ணீர் மூழ்கி இறக்கும் அபாயம் உள்ளது. கரையோரத்திலுள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்படும் நிலையுள்ளது.மணல் திருட்டு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் சார்பில் வருவாய்துறையினருக்கு பல முறை புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கிராம மக்களும், விவசாயிகளும் அதிருப்தியடைந்துள்ளனர். கல்லாபுரம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க வருவாய்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாரியம்மன் கோவில் ஆண்டு விழா
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. உடுமலை மாரியம்மன் கோவிலில், கடந்த 2008ம் ஆண்டு பிப்.,1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, நேற்றுமுன்தினம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜைகளும், சித்தி விநாயகர், செல்வமுத்துக்குமரன், மாரியம்மன், அஷ்டதிக் நாகராஜாக்கள், கலச ஆவாஹன பூர்வாங்க பூஜைகள், கடம்புறப்பாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், ஸ்நபன அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

திருமூர்த்தி வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை வேண்டும் :இயற்கை ஆர்வலர்கள் போர்க்கொடி
உடுமலை: வன உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ள திருமூர்த்தி அணை மற்றும் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குட்பட்ட பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீராகவும், உடுமலை பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திருமூர்த்தி அணை உள்ளது. இயற்கை எழில் மிகுந்த இடத்தில், சினிமா படக்குழுவினர் அடிக்கடி "ஷூட்டிங்' நடத்துகின்றனர். இதற்காக செயற்கை செட்டிங் அமைக்கின்றனர். இதனால், அப்பகுதியில் நீராதாரம் மட்டுமின்றி சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. திருமூர்த்தி அணையில் ஜன., 24ம் தேதி முதல்வர் கருணாநிதி கதை-வசனத்தில் எடுக்கப்படும், "பொன்னர்-சங்கர்' படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இதற்காக விதிமுறைகளை மீறி, வன எல்லையிலும், அணையின் நீர்தேக்கத்திற்கு அருகிலும் செட்டிங் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் படம் என்பதால், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது. இயற்கையை அழிக்கும் சினிமா படக்குழுவினருக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படப்பிடிப்பு குழுவினரால், தாக்கி இறந்த விலங்குகளின் உடல்கள் அணையில் வீசப்பட்டதால் தண்ணீரும் மாசடைந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் தெரிந்ததும் இயற்கை ஆர்வலர்கள் ஆவேசமடைந்துள்ளனர். விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வனம் பாதுகாக்கப்பட வேண்டும்: பசுமை மாறா இயற்கை பாதுகாப்புக்கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன்: திருமூர்த்தி அணையில்,படப்பிடிப்பு நடக்கும் இடம் வனப்பகுதியையொட்டிள்ளது. இப்பகுதியில், "100 டெசிபல்'க்கும் அதிகமாக சப்தம் எழுப்பினால், மரங்களில் கூடு வைத்து முட்டையிட காத்திருக்கும் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும். முட்டைகளில் கரு அடை காக்கப்படாமல் அழியும். காலை மற்றும் மாலை நேரங்களில், வன எல்லையிலிருந்து தண்ணீர் குடிக்க அணைப்பகுதிக்கு வரும் வன உயிரினங்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன. தடை செய்யப்பட்ட பகுதியாக இதுநாள் வரையிருந்த அப்பகுதியில், வெளியாட்கள் செல்லாமலும் இருந்தனர். இது ஒரு தவறான முன்னுதாரணமாக சுற்றுலாப்பயணிகள் செல்ல தூண்டு கோலாக மாறிவிடும். படப்பிடிப்புக்கு உயிர்ச்சூழல் நிறைந்த பகுதிகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.அ.தி.மு.க., போராட்டம் நடத்த திட்டம் : அ.தி.மு.க., மாநில தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிக்கை: முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களின் சுயநலத்திற்காக நடத்தும் படப்பிடிப்புகளால் கோவை பகுதியில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் இயற்கை வளம் அழிகிறது. கோவை நண்டங்கரை தடுப்பணையில் "ஏழாவது அறிவு' படத்திற்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட "செட்' காரணமாக தண்ணீர் மாசடைந்தது. தற்போது, இரண்டு மாவட்ட விவசாயிகளின் முக்கிய ஆதாரமாக உள்ள உடுமலை திருமூர்த்தி அணை முதல்வரின் வசனத்தில் உருவாகும் படத்திற்காக பாழ்படுத்தப்படுகிறது.புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. விதிமுறை மீறல்களை அனைத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். வனவிலங்குகளின் வாழ்க்கை முறை பாதிக்கப்படாமல் இருக்க பல தலைமுறைகளாக வசித்து வரும் மலைவாழ் மக்களை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், முதல்வர் படத்தின் படப்பிடிப்பிற்காக அணையில் தேங்கியுள்ள தண்ணீர் முழுவதும் மாசடைந்து மர்மமான முறையில் வனவிலங்குகள் இறந்துள்ளன. இதற்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயற்கை வளங்களை சீரழிக்கும் முதல்வரை கண்டித்து, கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில செய்தி தொடர்பாளர் ரமணன்: திருமூர்த்தி மலையில், வன உயிரினங்கள் மற்றும் உடுமலை பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக திருமூர்த்தி அணை உள்ளது. எனவே, இப்பகுதியில் சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்து அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம். என இந்து மக்கள் கட்சி (தமிழகம்) செய்தி தொடர்பாளர் ரமணன் கூறியுள்ளார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி: திருமூர்த்தி அணை பாசனத்திற்கு மட்டுமின்றி, குடிநீருக்கும் பயன்படுகிறது. வன விலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த அணைப்பகுதியில் சினிமா படப்பிடிப்பு அடிக்க நடந்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. நீர் மாசுபடுவதோடு, சுற்றுச்சூழலும் மாசுஅடைகிறது.
Download As PDF

Subscribe to:
Posts (Atom)