உடுமலை: கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியை நிரந்தரப்படுத்தக் கோரி, மூன்று ஆண்டுகளாக, கவுரவ விரிவுரையாளர்களை பல கட்டப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடந்த உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பின், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், உடன்பாட்டை அமல்படுத்தாமல், கவுரவ விரிவுரையாளர்கள் 170 பேரை, அரசு பணி நீக்கம் செய்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரம் மூன்று நாட்கள், தமிழகம் முழுவதும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம், உடுமலை எலையமுத்தூர் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநிலத்தலைவர் முத்துசாமி கூறுகையில், ""கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த கட்டமாக, கவுரவ விரிவுரையாளர்களை இணைத்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.
0 comments: (+add yours?)
Post a Comment