
உடுமலை: திருமூர்த்தி அணையில், தண்ணீரை மாசுபடுத்தி வரும் சினிமா "செட்'களை இரண்டு நாட்களுக்குள் அகற்ற திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் படப்பிடிப்பு குழுவினருக்கு இதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. உடுமலை அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணை, பல லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது. கடந்த ஜன., 24 ம் தேதி முதல் திருமூர்த்தி அணை பகுதியில், முதல்வரின் கதை வசனத்தில் உருவாகும் "பொன்னர்-சங்கர்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அணையின் ஒரு கரையில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் பகுதியில் பழமையான கோவில், அரண்மனை, போர் முரசுகள் அமைக்கப்பட்டன. இப்பகுதியில் இயல்பாக சுற்றி வந்து கொண்டிருந்த யானைகளின் வழித்தடத்தை மறித்ததால், அவை வேறு பகுதிக்குள் தஞ்சம் அடைந்தன. மேலும், வனவிலங்குகள் மர்மமான முறையிலும் இறந்து கிடந்தன. இவ்வளவு நடந்தும், அனைத்து அரசு துறை விதிமுறைகளையும் மீறி படப்பிடிப்பு நடந்தும், எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களுக்கு முன் உயர்ந்த நிலையில், படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட "செட்'கள் தண்ணீரில் மூழ்கின. அதிலிருந்து பல்வேறு ரசாயன கழிவுகள் வெளியேறி தண்ணீர் மாசுபட்டது. பாசன ஆதாரமாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகளின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கும் அணை, சினிமா படப்பிடிப்பால் பாதிக்கப்பட்டது பற்றியும், துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், முதல்வரின் கதை-வசனத்திற்காக மவுனம் சாதித்தது குறித்தும், "தினமலரில்' செய்தி வெளியானது. இதையடுத்து, பி.ஏ.பி., திட்ட அதிகாரிகளிடம் படப்பிடிப்பு செட் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதிகாரிகள் அறிக்கையின் படி அணையின் நீர் தேக்க பரப்பில் செட்கள் அமைக்கப்பட்டிருந்ததும், ரசாயன கழிவுகள் தண்ணீர் கலப்பதும் தெரியவந்தது. அறிக்கையின் அடிப்படையில், படப்பிடிப்பிற்கான செட்களை 2 நாட்களில் அகற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அணை பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றிருந்தாலும், நீர் நிலைகள் மாசுபடும் வகையில் "செட்'கள் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை அகற்ற இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
0 comments: (+add yours?)
Post a Comment