உடுமலை: "சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், செயல் வழி கற்றல் முறை தொடருமா என்பது குறித்து அரசு தெளிவாக விளக்கமளிக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. உடுமலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், கல்வித்துறை நிர்வாக வசதிக்காக உடுமலை தனி "கல்விமாவட்டமாக' அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பள்ளிகளில், தற்போது நடைமுறையில் முதல்வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை செயல்வழி கற்றல்முறை உள்ளது. பாடத்திட்டத்தில் செயல்வழி கற்றல் முறை குறித்த தெளிவாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் போது, செயல்வழி கற்றல் முறை தொடருமா என்பது குறித்தும், செயல்வழி கற்றல்முறை தொடரும் என்றால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி ? யார் பயிற்சி அளிப்பது என விளக்க வேண்டும். தரமான கல்வி என்பது மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து மாறி இயல்பாக அனைத்து திறனும் வெளிப்படும் வகையில், தேர்வு முறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். இது குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும். ஆசிரியர்களின் அணுகுமுறைகளில், செயல் திறனில் முன்னேற்றம் வளர்க்க திறமையான நிர்வாக அமைப்பை உருவாக்க வழிகாட்டுதல் வேண்டும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாமில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். கிராம கல்வித்திருவிழா நடைபெறும் நாளில், கல்விதீபம் ஏற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், தலைவர் ஸ்ரீரங்கன், ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், மணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)
Post a Comment