உடுமலை தங்கம்மாள் ஓடை நெல்லுக்கடை வீதியை சேர்ந்த கோவிந்தராஜ், கனகவள்ளி தம்பதியின் மகனான ஸ்ரீதர் (13) என்ற அந்த சிறுவன், தன்னை மீட்ட பொதுமக்களிடம் கூறியதாவது: நான் ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறேன். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், நண்பர்களுடன் கல்பனா ரோடு நேதாஜி மைதானத்தில் விளையாடினேன். மதியம் 1.30 மணிக்கு, வீட்டுக்கு சைக்கிளில் சென்றேன். ஆசாத் ரோடு வழியாக சைக்கிளில் சென்றபோது, ஆம்னி வேனில் வந்த சிலர், வேகமாக கதவை திறந்து என்னை உள்ளே இழுத்துக்கொண்டனர். அடுத்த வினாடியே ஆம்னி வேன், அங்கிருந்து புறப்பட்டது. கண் சிமிட்டும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது.
கடத்திய கும்பலில் மூவர் இருந்தனர். அவர்கள் என்னிடம், "உன் அப்பாவிடம் போன் செய்து ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொண்டு வரச்சொல்' என்று மிட்டினர். அதற்கு மறுத்த நான், "என் அப்பாவிடம் அவ்வளவு பணமில்லை' என கூறினேன். எரிச்சலடைந்த கும்பல், என்னை சிறிது நேரம் வேனிலேயே வைத்து சுற்றினர். "பணம் கிடைக்காது' என தெரிந்து கொண்ட அவர்கள், முக்கோணம் ஜெ.ஜெ., நகர் அருகே கிணற்றில் வீசி விட்டு சென்றனர். அதன்பிறகு தான் சத்தம் போட்டேன்.இவ்வாறு, சிறுவன் கூறினான்.
இதைக்கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையின்போது சிறுவன் கூறியதாவது: நண்பர்களுடன் விளையாடி விட்டு, மதியம் வீட்டிற்கு சாப்பிட தனியாக சைக்கிளில் கிளம்பினேன். கடையில், தண்ணீர் குடித்து விட்டு சைக்கிளில் புறப்பட்ட போது ஆம்னி வேனிலிருந்த மூன்று பேர் தூக்கிச்சென்றனர். "உன் அப்பா தங்க நகைக்கடை வைத்துள்ளார். அவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொண்டு வருமாறு கூறு' என மிரட்டினர். "எங்கப்பாவிடம் அவ்வளவு பணமில்லை; சம்பளத்திற்குத்தான் வேலைக்குச் செல்கிறார்' என்றேன்.
இதை கேட்டு, ஆத்திரமடைந்த மூன்று பேரும், முக்கோணம் அருகேயுள்ள கிணற்றில் தூக்கி போட்டுவிட்டு சென்றனர். அவ்வழியாக சென்ற சிலர், கிணற்றில் இருந்து நான் கூச்சல் போட்டதை பார்த்து காப்பாற்றினர்.இவ்வாறு, சிறுவன் தெரிவித்தான்.சிறுவனின் தந்தை கோவிந்தராஜ் கூறுகையில்,"" ஸ்ரீதர் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் விளையாட சென்றுள்ளான். மகன் பணத்திற்காக கடத்தப்பட்டதும், மீட்கப்பட்டதும் அறிந்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன். யார் இப்படி செய்தனர் என்று தெரியவில்லை. மகன் உயிருடன் வந்தது நிம்மதியளிக்கிறது,'' என்றார். இச்சம்பவம் குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் சந்தேகம் : பள்ளி மாணவன் கூறும் "கடத்தல்' சம்பவம் பற்றி உடுமலை டி.எஸ்.பி., முருகானந்தம் கூறியதாவது:கடத்தல் புகார் பற்றி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடம், கிணற்றில் வீசப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தேன். மாணவனின் பெற்றோரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். கடத்தப்பட்டதாக புகார் கூறும் மாணவன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில், பல விதமான சந்தேகங்கள் எழுகின்றன. "கடத்தல் சம்பவம் உண்மையானதா' என்று விசாரித்து உறுதிப்படுத்திய பிறகே அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்வோம். இவ்வாறு, டி.எஸ்.பி., தெரிவித்தார். Download As PDFPrint this post
0 comments: (+add yours?)
Post a Comment