
உடுமலை : உடுமலை அருகே தொடர் மழை காரணமாக அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட உட்பட்ட 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இரண்டு மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 90 அடி கொள்ளளவு உடைய அணையில், பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தாண்டு, வடகிழக்கு பருவமழைக்கு பிறகு அணைக்கு போதிய நீர் வரத்து இல்லை. நீர் இருப்பு பல கட்டங்களாக பாசனத்திற்கு திறக்கப்பட்டது. காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பற்ற புதிய ஆயக்கட்டு பகுதிக்கு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் 18 ம் தேதி வரை பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 40 அடிக்கு குறைவாகவும் இருந்த அணையின் நீர்மட்டம் தண்ணீர் திறப்பால் வேகமாக குறைந்தது. நீர் வரத்து ஆறுகளான பாம்பாறு மற்றும் சின்னாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், வறண்டு காணப்பட்டது. இதனால், கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் நீடித்தது. தற்போது சின்னாறு, பாம்பாறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 2நாட்களின் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 28.38 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 404 கன அடியாக இருந்தது. அணையில் நேற்று 11 மி.மீ., மழை பெய்தது.