உடுமலை : அமராவதி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து, பாறைகள் தெரிவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்துள்ளதால் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உடுமலை அருகே 90 அடி கொள்ளளவு உடைய அமராவதி அணை கடந்த நவ., மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் நிரம்பியது. இதனையடுத்து, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஜன., 1 ல் தண்ணீர் திறக்கப்பட்டு பிப்., மாத இறுதி வரை தண்ணீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாதது, கொளுத்தும் வெயில் காரணமாக அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்து 10 கன அடி மட்டுமே உள்ளது. இதனால், அணையின் நீர் மட்டம் சரிந்து பல இடங்களில் பாறை தெரிகிறது.நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 38.19 அடியாக இருந்தது. நீர் வரத்து 10 கன அடியாகவும், வெளியேற்றம் 200 கன அடியாகவும் உள்ளது.அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.கோடையை சமாளிக்குமா? அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய மூன்று ஆறுகளின் மூலம் அணைக்கு தண்ணீர் பெறப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வழக்கமாக ஜூன் மாத துவக்கத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். கோடை வெயில் முன்னதாகவே துவங்கி கொளுத்தி வரும் நிலையில், ஜூன் மாதம் வரை அணை வறண்டு விடாமல் இருப்பது கேள்விக்குறியாகியுள்ளது. தற்போதுள்ள 38.19 அடி நீர் மட்டத்தில் நெற்பயிர்களை காப்பற்ற 15 நாட்கள் தண்ணீர் கேட்டு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பாசனத்திற்கு தண்ணீர் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்கப்பட்ட பின் மழை பெய்தால் மட்டுமே அணை வறண்டு விடுவது தவிர்க்கப்படும். மழை கைவிட்டால், அணையை நம்பியுள்ள இரண்டு மாவட்ட குடிநீர் ஆதாரங்கள் வறண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது.
